புத்ராஜெயா, நவம்பர்.20-
முன்னள் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் காலஞ்சென்ற கேவின் மொராயிஸ் கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கோலாலம்பூர் வங்சா மாஜு, இராணுவ மருத்துவமனையின் முன்னாள் மருத்துவர் டாக்டர் ஆர். குணசேகரன், தனக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை தீர்ப்பை சீராய்வுச் செய்யக் கோரி வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
62 வயதுடைய டாக்டர் குணசேகரன், Cheng & Maman என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தனக்கு மரணத் தண்டனையை நிலை நிறுத்தியிருக்கும் கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று டாக்டர் குணசேகரன் தனது மனுவில் கோரியுள்ளார்.
தற்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் டாக்டர் குணசேகரன், நாட்டின் அன்றைய தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட் தலைமையில் மூன்று விசாரணை நீதிபதிகள், தனது வழக்கறிஞர் முன்வைத்த தற்காப்பு வாதத்தைப் பரிசீலனைச் செய்ய தவறி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.








