Sep 29, 2026
Thisaigal NewsYouTube
பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை
தற்போதைய செய்திகள்

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM -ஐத் தொடர்பு படுத்தி நிறுவன மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையானது, புக்கிட் அமான் பணமோசடிக்கு எதிரான சிறப்பு படையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, விக்டர் சின் சொந்தமான பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரணையில் உள்ள இந்த விவகாரம் குறித்து விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதாகவும் காலிட் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தின் சுங்கை லோங் மற்றும் கெமென்சா ஆகிய பகுதிகளில், அச்சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களில் இரண்டு கார்கள், ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், நகைகள், ரொக்கத்தொகை மற்றும் பல்வேறு வெளிநாட்டு நாணய வடிவிலான பணம், அத்துடன் விசாரணை தொடர்பானவை எனக் கருதப்படும் ஆவணங்களும் அடங்கும் என்று கூறப்படுகின்றது.

இச்சோதனைகளின் போது விக்டர் சின், அவரது மனைவி மற்றும் 3 பணியாளர்கள் வீட்டில் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நிறுவனம் ஒன்றைக் கையகப்படுத்தும் விவகாரத்தில் அந்நிறுவனத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கு அழுத்தம் கொடுக்க,வர்த்தகர்கள் குழு ஒன்று, SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆஸாம் பாகி உட்பட பல அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விவரிக்கும் கட்டுரையை சர்வதேச ஊடகமான புளூம்பெர்க் கடந்த மாதம் வெளியிட்டது.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ஆஸாம் பாகி கடுமையாக மறுத்துள்ளார். மேலும், புளூம்பெர்க் நிறுவனத்திற்கு எதிராக 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News