பெத்தாலிங் ஜெயா,ஜன.30
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாடாளுமன்ற உறுப்பினராக ஆனது முதல் தனது சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகையை எடுத்தது இல்லை என்று தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமது சம்பளத்தையும், அவலவன்ஸ் தொகையையும் தமது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்துக் கோயில்கள், மசூதிகள் , தேவாலயங்கள் , சீனக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி வருவதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளுக்கான ஓய்வூதியத் தொகையான Pencen நிறுத்தப்படுவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் டத்தோ ரமணனிடம் கருத்து கேட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறினார். சம்பளம், அலவன்ஸ் தொகை எடுக்காத பட்சத்தில் பென்ஷன் தொகை குறித்து தாம் கருத்துரைப்பது தவறு என்பதையும் டத்தோ ரமணன் தெளிவுபடுத்தினார்.
இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அமானா இக்தியார் மலேசியா தலைமையகத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.








