பெத்தாலிங் ஜெயா,பிப்.2
லஞ்ச ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தற்போது 12 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், பொது மன்னிப்புக்கோரி செய்து கொண்டுள்ள விண்ணப்பம் தொடர்பான முடிவில் அவரின் 12 ஆண்டு சிறைத் தண்டனைக் காலம் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இதேபோன்று நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட 21 கோடி வெள்ளி அபராதத் தொகை, 5 கோடி வெள்ளியாக குறைக்கப்பட்டுள்ளது. தனக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று 70 வயதான நஜீப் செய்து கொண்ட விண்ணப்பம், கடந்த திங்கட்கிழமை, மன்னிப்பு வாரியத்தினால் பரிசீலிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நஜீப்பின் விண்ணப்பம் தொடர்பான முடிவு இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த ஒரு சில மணி நேரத்தில் நஜீப்பின் தண்டனை காலம் 6 ஆண்டு காலமாக குறைக்கப்பட்டு இருக்கும் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
1MDB துணை நிறுவனமான SRC Internasional நிதி மோசடி தொடர்பில் லஞ்ச ஊழல் குற்றத்திற்காக 12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கும் வகையில் நஜீப் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
பொது மன்னிப்பு கோரி நஜீப் செய்து கொண்ட விண்ணப்பம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இஸ்தானா நெகாராவில் நாட்டின் 16 ஆவது மாமன்னர் சுல்தான் அப்துல்லா தலைமையில் கூடிய கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம், முக்கிய முடிவை எடுத்து இருப்பதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.








