2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 1,700 ரிங்கிட்டிலிருந்து 2,000 ரிங்கிட்டாக உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து சில நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்த ஊதிய உயர்வு மக்களுக்குத் தங்கள் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும், அன்றாடச் செலவுகளை எளிதாகக் கையாளவும் உதவும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைவதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளையில், இந்த உயர்வு குறித்து சில முதலாளிகள் ஆதரவும், சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தேசிய ஊதிய ஆலோசனைக் குழுத் தலைவர் டான் ஶ்ரீ ஸைனால் மற்றும் அவரது குழுவினர் பல்வேறு தொழில்துறைப் பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரமணன் உறுதியளித்தார்.
அவசரமாக முடிவெடுக்காமல், பொருட்களின் விலை உயர்வு, பணவீக்க விகித உயர்வு முதலியவற்றை கருத்தில் கொண்டு கவனமான ஆலோசனைகள் மற்றும் ஆழமான கணக்கீடுகளுக்குப் பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்வு நான்கு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும். அதேவேளை, ஆண்டு விற்பனை 50 மில்லியன் ரிங்கிட்டுக்குக் குறைவான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த உயர்விலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்படும் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் விளக்கினார்.








