மலேசியாவின் குறைக்கடத்தித் தொழில்நுட்பத் துறையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வகையில், சிலாங்கூரில் உள்ள சிப்ஸ் வடிவமைப்பு நிறுவனங்கள் உருவாக்கிய ஆறு புதிய சிப்ஸ் தொழில்நுட்பங்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஐசெம்@சிலாங்கூர் 2026 (AiSEM@Selangor 2026) நிகழ்ச்சியில் பேசிய சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூரின் இரண்டு சிப்ஸ் வடிவமைப்புப் பூங்காக்களில் 20 நிறுவனங்களைச் சேர்ந்த 407 பொறியாளர்கள் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, வாகனத் தொழில்நுட்பம், விண்வெளி மின்சக்தி மற்றும் ட்ரோன் கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு இந்தச் சிப்கள் பயன்படும் என்றார்.
மேலும், குறைக்கடத்தித் துறையில் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க 100 மில்லியன் ரிங்கிட் நிதி திரட்டப்படுவதாகவும், செயற்கை நுண்ணறிவின் வாய்ப்புகள், அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை ஆராய்வதற்கான வெள்ளை அறிக்கையைச் சிலாங்கூர் தயாரிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.








