குவாந்தான், ஜூன் 04-
எண்ணெய் நிலையத்தில் நிறுத்தப்பட்ட காரில் வயதான தம்பதியர் அமர்ந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் காரை திருடிக்கொண்டு தப்பிச்சென்ற ஆடவர் ஒருவரை பகாங் மாநில போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று திங்ட்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் குவந்தான், செமாம்பு எண்ணெய் நிலையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஒரு கணக்காய்வாளரான 38 வயது மாது தனக்கு சொந்தமான ஹோண்டா சிட்டி காரை பறிகொடுத்தப் போதிலும், காரில் அமர்ந்திருந்த தனது 77 வயது தந்தையையும், 66 வயது தாயாரையும் அந்த ஆசாமி சுமார் 400 மீட்டர் தூரத்தில் சாலையோரத்தில் இறக்கிவிட்டு சென்றது மூலம் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
எண்ணெய் நிரப்புவதற்காக அந்த மாது காரை நிறுத்தி விட்டு, எண்ணெய் நிலையத்திற்கு சென்ற போது, கார் திடீரென்று நகர்வதை கண்டு அதிர்ச்சியில் உறைந்ததாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் முகமது ஜஹாரி தெரிவித்தார்.
கோலாலம்பூர், செந்தூலைச் சேர்ந்த அந்த மூத்த தம்பதியர் இச்சம்பவத்தில் காயமடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, அந்த காரை களவாடுவதற்கு அந்த ஆசாமி, பயன்படுத்தி மோட்டார் சைக்கிள், ஏற்கனவே காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டதாகும் என்று வான் முகமது ஜஹாரி குறிப்பிட்டார்.








