தற்போது பெய்து வரும் அடை மழையால் சிலாங்கூர், கோலா லங்காட்டில் மேலும் ஒரு துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்தம் 8 துயர் துடைப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணி நிலவரப்படி, டத்தோ ஹொர்மாட் ஶ்ரீ செடிங் மண்டபம் தற்போது துயர் துடைப்பு மையமாக செயல்படத் தொடங்கியுள்ளது. அதில் தஞ்சம் புகுந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது கணக்கிடப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரையில் சிலாங்கூரில் உலு லங்காட், பெட்டாலிங், கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவு தொடர்ந்து வெள்ள நிலவரத்தை கவனித்து வருவதோடு உரிய நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் வெள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது தகவலை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளது.








