வங்கியில் கடனை பெறுவதற்கு தங்கள் இபிஎப். சேமிப்பை ஓர் உத்தரவாதமாக சந்தாதாரர்கள் பயன்படுத்தி, உரிய கடனை பெற முடியும் என்று அரசாங்கம் உறுதி அளித்த போதிலும் வர்த்தக வங்கிகள் இபிஎப். கணக்கில் உள்ள சேமிப்புப்பணத்தில் 70 விழுக்காடு வரையில் மட்டுமே கடன்களை வழங்க முன் வருகின்றன என்று மசீச தலைவர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். பணத்தை பிடிமானத் தொகையாக வைத்து வங்கியில் எடுக்கப்படும் கடன்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படுவதும் சந்தாதாரர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதையும் வீ கா சியோங் சுட்டிக்காட்டினார்.
இதன் தொடர்பில் வங்கியில் கடன் பெற விரும்பும் இபிஎப். சந்தாதாரர்களுக்கு அரசாங்கம் விரிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
காரணம், சிரமத்தில் உள்ள சந்தாதாரர்கள், தங்கள் இபிஎப். கணக்கில் மீண்டும் ஒரு முறை பணத்தை மீட்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிட் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதற்கு மாறாக, இபிஎப். சேமிப்பை பிணையாக வைத்து வங்கியில் கடன் பெற முடியும் என்று அறிவித்துள்ளார். ஆனால், பெறக்கூடிய கடனுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்படுவது சந்தாதாரர்களுக்கு மேலும் நிதி சுமையை ஏற்படுத்தாதா? என்று வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.








