நெகிரி செம்பிலான், தம்பின், ரெப்பா பகுதியில் புதிய நவீன மின் சுடலை மையம் அமைப்பதற்கான நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அத்திட்டத்திற்கான பூமி பூஜை விழா இன்று காலையில் சிறப்பாக நடைபெற்றது.
ரெப்பா சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், வீரப்பனின் சிறப்பு அதிகாரி முரளி, மின் சுடலை மையம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட கோவிந்தசாமி தலைமையிலான கோவில் நிர்வாகத்தின் சிறப்புக்குழு, இதர ஆலயங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆன்மீக முறைப்படி குருக்கள் அழைக்கப்பட்டு, வழிபாடுகளுடன் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன இந்நிகழ்வில் உரையாற்றிய எஸ்.வீரப்பன், "கடந்த 2020-ஆம் ஆண்டே இதற்கான திட்டமிடல் தொடங்கப்பட்டது. குறிப்பாக, கோவிட் காலத்தில் அதிகமானோர் இறந்தபோது, அவர்களைத் தகனம் செய்வதற்கு போதிய மின் சுடலை வசதிகள் இல்லை. பொதுமக்கள் இறுதிச் சடங்கிற்காக ஒன்று சிரம்பான் செல்ல வேண்டும், இல்லையேல் மலாக்கா செல்ல வேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்தது. இத்தகைய போதிய இட வசதியில்லாத சூழலில்தான், தம்பினில் ஒரு மின்சுடலை மையம் கண்டிப்பாக நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் அவசரமாக முன்னெடுக்கப்பட்டது" என்று அதன் பின்னணியை விளக்கினார்.
மேலும், மலேசியா மடாணி கொள்கையின் கீழ் இந்திய சமூகத்தின் நலனுக்காக எட்டு மாநிலங்களில் இந்த மின் சுடலை மையத் திட்டங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் ஆகியோருக்கும் வீரப்பன் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
பல வருடப் போராட்டத்திற்குப் பின் சாத்தியமாகியுள்ள 25 லட்சம் ரிங்கிட் செலவிலான இந்த மின்சுடலையை நிர்மாணிப்பதற்கு 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதையும் வீரப்பன் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து ஒத்துழைப்பு நல்கி வரும் கோவிந்தசாமி தலைமையிலான கோவில் நிர்வாகத்தின் சிறப்புக்குழுவிற்கு வீரப்பன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.














