போர்ட்டிக்சன்,ஜாலான் லிங்கி, கம்போங் பாரிசான் என்ற இடத்தில் விஷம் கலந்த நீரைப் பருகிய 25 எருமைகள் மடிந்ததாக அதன் உரிமையாளர்களான இரு இந்திய சகோதர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் தங்களுக்கு சொந்தமான மேலும் 30 எருமைகள் காணவில்லை என்று 25 வயது யுவன்குமாரன் குணாளன் மற்றும் அவரின் சகோதரர் 19 வயது புவேந்திரன் குணாளன் புகார் அளித்துள்ளனர்.
நூற்றுக்கு மேற்பட்ட கால் நடைகளை வளர்த்து வரும் அந்த சகோதரர்கள் தங்களுக்கு சொந்தமான எருமைகள் அருகில் உள்ள தோட்டத்திற்கு மேய்ச்சலுக்கு சென்றிருந்த வேளையில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் ஒன்றை நேற்று மாலை 4.30 மணியளவில் தாங்கள் பெற்றுள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிந்தென்டன் ஐடி ஷாம் முஹமாட் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 428 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.இந்த பாதகத்தை செய்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு, குற்றம் உறுதி செய்யப்பட்டால் கூடிய பட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று ஐடி ஷாம் தெரிவித்தார்.







