May 4, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

Share:

மலேசியத் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகப் போராடி, மே 1 தொழிலாளர் தினத்தைப் பொது விடுமுறை நாளாகப் பெற்றுத் தந்த வரலாற்று நாயகர் டாக்டர் வி. டேவிட் அவர்களின் பெயரில் 'சிறந்த தொழிலாளர் விருது' வழங்குவது குறித்து தாம் பரிசீலனை செய்து வருவதாக மாநில மனித வள மற்றும் வறுமை துடைத்தொழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவித்துள்ளார்.

இன்று ஷா ஆலாம், சிலாங்கூர் மாநில அரசு கட்டட வெள்ளி விழா மண்டபத்தில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசியய பாபாராய்டு, ஜசெக-வின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் வி. டேவிட் ஆற்றிய அளப்பரிய பணிகளை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்று குறிப்பிட்டார். அவரது தியாகத்தைப் போற்றும் வகையிலும், தொழிலாளர்களைக் கௌரவிக்கும் வகையிலும் மாநில மனித வள மற்றும் வறுமையொழிப்பு ஆட்சிக்குழுவின் சார்பில் இந்த விருது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.

"“Pekerja MADANI Kesuma Bangsa”, எனும் கருப்பொருளுடன் நடைபெற்ற இவ்விழாவில் பேசிய பாபாராய்டு, தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட ஒரு முன்னோடித் தலைவரின் பெயரால் விருது வழங்கப்படுவது, இன்றைய தலைமுறைத் தொழிலாளர்களுக்குப் பெரும் ஊக்கமாகவும், டாக்டர் வி. டேவிட்டின் வரலாற்றுச் சுவடுகளை நிலைநிறுத்துவதாகவும் அமையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக தமது உரையில், தொழிலாளர்களை வெறும் பணியாளர்களாகப் பார்க்காமல், நிறுவனத்தின் வெற்றியில் சரிசமமான பங்காளிகளாக மதிக்க வேண்டும் என பாபாராய்டு, முதலாளிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு முறையான பயிற்சி அளித்து, அவர்களை உற்பத்தி மற்றும் தோட்டத்துறைகளில் பணியமர்த்துவதன் மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தேவையைக் குறைக்க மாநில அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகளையும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

Related News