கோலாலம்பூர், மார்ச்.25-
மத்தியக் கிழக்கில் நீடித்து வரும் மோதலினால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களை எதிர்கொள்ள மலேசியா தயாராக இருக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலான MKM தெரிவித்துள்ளது.
நேற்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு, இன்று தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சிலின் சிறப்பு கூட்டமும் நடைபெறும் என நேற்றிரவு வெளியிடப்பட்ட முகநூல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவரத்தைச் சமாளிக்க அரசாங்கம் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மோதலைத் தீர்க்கும் முயற்சிகளில் மலேசியா முன்முயற்சியுடன் செயல்படும் என்று MKN தெரிவித்துள்ளது.
மேலும், அன்வார், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் தங்களது சக வெளிநாட்டு தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலைத் தவிர, இந்த விவகாரத்தில் முக்கியப் பங்காளிகளாக உள்ள அனைத்து நாடுகளுடனும் மலேசியா நல்லுறவைக் கொண்டுள்ளது.
மலேசியாவின் உறுதியான நிலைப்பாடு, நடுநிலைமை மற்றும் நேர்மையான அணுகுமுறை ஆகியவை அதற்கு சர்வதேச மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளதாக MKN குறிப்பிட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள போர் நிறுத்தத்தை அரசாங்கம் வரவேற்றுள்ளதாகவும், இந்த இடைவெளி தீவிரமான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த போர் நிறுத்தம் காரணமாக சர்வதேச எண்ணெய் விலைகள் குறைந்துள்ளதை அரசு கவனித்துள்ளதாகவும் MKN விவரித்துள்ளது.








