கெடா மாநிலம் கூலிம் மாவட்டத்தில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் 17 சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் சட்டவிரோதக் குடியேறிகளை ஒழிக்கும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இச்சோதனை நடத்தப்பட்டதாக கெடா மாநில குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் முகமாட் ரிட்சுவான் முகமாட் ஜென் தெரிவித்தார்.
15 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கூலிம் பகுதியில் உள்ள நான்கு வளாகங்களில் ஓப்ஸ் மாஹிர், ஓப்ஸ் சாப்பு, ஓப்ஸ் செலெரா, ஓப்ஸ் குதிப் ஆகிய கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இச்சோதனையில் மொத்தம் 35 பேர் பரிசோதிக்கப்பட்டதில், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது மற்றும் விசா காலத்தை மீறி தங்கியிருந்தது போன்ற குற்றங்களுக்காக 22 முதல் 54 வயதுடைய 17 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 9 வங்காளதேசத்தவர்கள், 7 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு தாய்லாந்து நாட்டவர் அடங்குவர்.
மேலதிக விசாரணைக்காக இருவருக்கு சாட்சிக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளதுடன், கைதான அனைவரும் சிக் பகுதியில் உள்ள பெலாந்திக் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நாட்டின் குடிநுழைவுச் சட்டங்களை நிலைநாட்ட இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.















