மலேசியர்கள் 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய அனைத்துலக கடப்பிதழுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று உள்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பிரஜைகள் தங்களின் தேவைக்கேற்ப 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மலேசியா முழுவதும் உள்ள 71 கடப்பிதழ் அலுவலகங்களில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த 10 ஆண்டு கடப்பிதழின் விலை 350 ரிங்கிட் ஆகும், அதே நேரத்தில் 5 ஆண்டு கடப்பிதழின் விலை 200 ரிங்கிட்டாகவே நீடிக்கிறது. ஒரே காலக்கட்டத்தில் 5 ஆண்டு கடப்பிதழை இரண்டு முறை புதுப்பிப்பதை விட, இந்த 10 ஆண்டு கடப்பிதழைத் தேர்ந்தெடுப்பது விண்ணப்பதாரர்களுக்கு 50 ரிங்கிட் வரை மிச்சப்படுத்தும் என்று அமைச்சு கூறியுள்ளது.
மேலும், பாதுகாப்பை பலப்படுத்த புதிய கடப்பிதழில் பாதுகாப்பு அம்சங்கள் 94 ஆக உயர்த்தப்பட்டிருப்பதோடு, செம்பருத்தி சின்னத்திற்குப் பதிலாக 'ராஜா ப்ரூக்ஸ் பேர்ட்விங் வண்ணத்துப்பூச்சி சின்னம் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போதைய கடப்பிதழ் இன்னும் செல்லுபடியாகும் பட்சத்தில், பொதுமக்கள் அவசரமாக மாற்றத் தேவையில்லை என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.








