மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளால் திட்டங்களின் செலவு அதிகரித்தால், அதற்கான கூடுதல் தொகையை மத்திய அரசு தானாகவே ஏற்கும் என்று எதிர்பார்க்க முடியாது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார். திட்டங்களின் செலவுகள் அதிகரிக்கும் போது, கூடுதல் நிதி அல்லது கடனுக்கான கோரிக்கைகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும், மாநில அளவில் ஏற்படும் சிக்கல்களுக்கு மத்திய அரசு தானாகவே கூடுதல் நிதியை வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
கெடா மாநிலத்தில் உள்ள பெலுபாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் அவாங் ஹாஷிம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
இத்திட்டத்திற்கு கூடுதலாக 113 மில்லியன் ரிங்கிட் நிதி ஒப்புதல் தேவைப்படுவதாகவும், கடன் வழங்கும் செயல்முறை ஐந்து மாதங்கள் எடுப்பதால் திட்டத் தாமதத்தைத் தவிர்க்க கெடா மாநில அரசு 40 மில்லியன் ரிங்கிட் முன்பணமாகச் செலுத்தியுள்ளதாகவும் அவாங் ஹாஷிம் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒப்புதல் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்தத் தயாராக உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு சுமுகமாக இருக்க வேண்டும் என்பதை அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.








