டீசலுக்கான இலக்குரிய உதவித்தொகையை தொடர்ந்து, அத்தகைய உதவித்தொகையை இன்னும் பெறாமல் இருக்கும் பள்ளி பேருந்து நடத்துநர்கள் மற்றும் நிறுவனங்கள் மேல்முறையீடு விண்ணப்பம் செய்யலாம் என்று வலியுறுத்தப்படுகிறது.
மேல்முறையீடு செய்யும் தகுதி பெற்றவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதுடன் இந்த உதவித்தொகை இலக்கிடப்பட்ட குழுக்களுக்கு சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim கூறினார்.
இலக்குரிய டீசல் உதவித்தொகையை இன்னும் கிடைக்க பெறாமல் இருக்கும் தகுதியுடையவர்கள் விரைந்து மேல்முறையீடு செய்தால் அவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்க செய்யப்படும்.
அதுவே, பெரிய நிறுவனங்கள், அதிக லாபத்தை ஈட்டக்கூடிய சுற்றுலா நிறுவனங்கள் ஆகியவை இந்த உதவித்தொகைக்கு மேல்முறையீடு செய்ய விரும்பினால் அது பயனற்றது என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார். டீசல் உதவித் தொகையானது இலக்கிடப்பட்ட மக்களை மட்டுமே சென்றடையும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று பிரதமர் கேட்டு கொண்டார்.
மேலும், டீசல் உதவித்தொகையை பெற்று பேருந்து கட்டணத்தை உயர்த்தும் பள்ளி பேருந்து நடத்துநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் அன்வார் மீண்டும் எச்சரித்தார்.
டீசல் உதவித்தொகையை தொடர்ந்து, மக்களை கவலையில் ஆழ்த்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு தொடர்பான சிக்கல்களையும் அரசாங்கம் சுமுகமான முறையில் கையாளும் என்று அவர் மேலும் அறிவித்தார்.








