துபாயிலிருந்து சிங்கப்பூருக்கு 12 இஸ்ரேலிய பயணிகளுடன் சென்று கொண்டிருந்த எமிரெட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இகே 354 விமானம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து சிங்கப்பூரை நோக்கி பயணிக்க இயலாமல் அந்த விமானம் நேற்று காலையில் கோலாலம்பூரில் அவசரமாக தரையிறங்குவதற்கான அனுமதியைப் பெற்றது. அந்த விமானம், கோலாலம்பூரில் நிறுத்தப்பட்டு இருந்த வேளையில் பயணிகள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அவசரத் தரையிறக்கத்திற்கான விமானங்கள் நிறுத்தும் இடமான தார்மாக்க்கில் அந்த எமிரெட்ஸ் விமானம் சுமார் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிலைமை சீரடைந்தப் பின்னர் அந்த விமானம் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.மலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் நெடுங்காலமாகவே தூதரக உறவு கிடையாது. இந்நிலையில் ஏற்பட்ட அசெளகரியத்திற்காக இஸ்ரேலிய தூதகரம் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.







