புத்ராஜெயா,ஜன.23
மலேசிய இந்தியர்கள் இந்நாட்டிற்கு விசுவாசமற்றவர்கள் என்று அண்மையில் இந்திய தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து, பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ள முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிடம் போலீசார் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனதுவேஷத் தன்மையில் உணர்ச்சிகரமான விவகாரத்தை பேசியுள்ள துன் மகாதீர், தாம் அளித்த பேட்டி தொடர்பில் இன்று பிற்பகல் 3 மணியளவில் புத்ராஜெயா, Yayasan Kepimpinan Perdana அறக்கட்டளை அலுவலகத்தில் அவரிடம் போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்வர் என்று கூறப்படுகிறது.
துன் மகாதீரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவது தொர்பில் அவருக்கு குறுந்தகவல் அனுப்பட்டுள்ளது என்று துன் மகாதீருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மலேசிய இந்தியர்கள், மலேசியா மீது விசுவாசம் கொண்டிருக்கவில்லை என்றும், தங்களின் பூர்வீக நாட்டின் மீதான் விசுவாசமாக உள்ளனர் என்றும் தங்கள் வீடுகளில் இன்னமும் தமிழ்மொழியைதான் பேசிக்கொண்டு இருக்கின்றனர் என்றும் துன் மகாதீர், அண்மையில் சினமூட்டும் தன்மையில் அளித்த பேட்டி தொடர்பில் நாடு தழுவிய நிலையில் அவருக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த முன்னாள் பிரதமர் மீது போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த போலீஸ் புகார்களில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தன.








