Dec 3, 2025
Thisaigal NewsYouTube
3 துறைகளில் அந்நியத் தொழிலாளர்கள் அனுமதிப்பது மூலம் மூவாயிரம் தொழில் முனைவர்கள் பயன்பெறுவர் -துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தகவல்
தற்போதைய செய்திகள்

3 துறைகளில் அந்நியத் தொழிலாளர்கள் அனுமதிப்பது மூலம் மூவாயிரம் தொழில் முனைவர்கள் பயன்பெறுவர் -துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தகவல்

Share:

இந்தியர்களின் பாரம்பரியத் தொழில்களான சிகை அலங்கரிப்பு, ஜவுளியகம் மற்றும் நகைக்கடைகள் ஆகியவற்றில் அந்நியத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்திக்கொள்வதற்கான விண்ணப்பங்களில் ஒரு பகுதியை அங்கீரிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்து இருப்பது மூலம் கிட்டத்தட்ட 3 ஆயிரம் தொழில் முனைவர்கள் பயன்பெறுவர் என்று தொழில் முனைவர்கள் மற்றும் கூட்டறவு மேம்பாட்டத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.

அந்நியத் தொழிலாளர்களை புதியதாக வேலைக்கு அமர்த்திக்கொள்தற்கு இந்த மூன்று துறைகளும், இதற்கு முன்பு முடக்கப்பட்டு இருந்த வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இந்த அறிவிப்பின் மூலம் பாரம்பரியத் தொழில் துறைகளான சிகை அலங்கரிப்பு, ஜவுளியகம் மற்றும் நகைக்கடை வர்த்தகங்கள் புத்தெழுச்சி பெறும் என்று துணை அமைச்சர் சரஸ்வதி நம்பிக்கை தெரிவித்தார்.
வருகின்ற நவம்பர் மாதம் தீபாவளி திருநாளை கொண்டாடப்படும் வேளையில் இந்தியர்களின் மிக அத்தியவாசியத்துறைகளான இந்த மூன்று துறைகளிலும் பணியாற்றுவதற்கு போதுமான ஆள்பலம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று பிரிக்பீல்ட்ஸ், மெனாரா பேங்க் ராக்யாட்டில் நடைபெற்ற மேற்கண்ட மூன்று துறைகளை சார்ந்த சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மேற்கண்டவாறு கூறினார்.
தீபாவளிக்கு முன்னதாகவே இந்த மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களின் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு பிறந்து இருப்பது உண்மையிலேயே ஒரு நல்ல செய்தியாகும் என்ற துணை அமைச்சர் விளக்கினார்.

தவிர இத்துறைகளை சார்ந்தவர்கள் தொடர்ந்து அந்நியத் தொழிலாளர்களை நம்பியிருப்பதைக் காட்டிலும் தாங்கள் சார்ந்துள்ள தொழில்துறை குறித்து உள்ளூர் இளைஞர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, உள்ளூர் ஆள்பலத்தை பெருக்க வேண்டும் என்று சரஸ்வதி கந்தசாமி கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இந்த அறிவிப்பின் மூலம் வெளிநாடுகளிலிருந்து அந்நியத் தொழிலாளர்களை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறாக, வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள சட்டவிரோதத் தொழிலாளர்களை சட்டப்பூர்வத் தொழிலாளர்களாக பதிவு செய்து கொள்ளும் மறு கட்டமைப்புத் திட்டத்தின் மூலமாக இங்குள்ள சட்டவிரோதத் தொழிலாளர்களை சட்டப்பூர்வத் தொழிலாளர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று சரஸ்வதி கந்தசாமி பரிந்துரை செய்தார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல், மலேசிய இந்திய ஜவுளியக சங்கத்தின் தலைவர் டத்தின் மகேஸ்வரி மற்றும் இந்தியர் சிகை அலங்கரிப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News