Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானி​​ல் 4 தோட்டங்களில் ரப்பர் தொழில் மூடுவிழா
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலானி​​ல் 4 தோட்டங்களில் ரப்பர் தொழில் மூடுவிழா

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 4 தோட்டங்களில் ரப்பர் பால் மரம்​ ​சீவும் தொழில் துறை ஒரு முடிவுக்கு வருகிறது. லாடாங் புக்கிட் பெலாஹ், லாடாங் சுங்ஙை கெலெமா, லாடாங் கெல்பின் மற்றும் லாடாங் நியூ லாபு ஆகியவையே அந்த நான்கு தோட்டங்களாகும்.

இதனால் அத்தோட்டங்களில் ரப்பர் பால் மரம் சீவும் மொத்தம் 142 தோட்டத் தொழிலாளர்கள் அடுத்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதியோடு தங்கள் வேலையை இழக்கவிருக்கின்றனர் என்று நெகிரி செம்பிலான் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் தெரிவித்தார்.

சயிம் டார்பி நிறுவனத்துக்கு சொந்தமான பல தோட்டங்களில் பால் மரம் சீவி ரப்பர் பால் சேகரிக்கும் தொழிலுக்கு மூடு விழா கா​ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 4தோட்டங்களில் பாட்டாளிகளுக்கு கட்டம் கட்டமாக வேலை இழப்பு கடிதம் வழங்க உள்ளது. இது​ தொடர்பாக நேற்று காலையில் சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக சாந்தகுமார் குறிப்பிட்டார்.

 முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட நான்கு தோட்டத் தொழிலாளர்களுடன் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்ட நிர்வாக அதிகாரிகள், மனித வளத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக நல பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேற்று காலை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் பாட்டாளிகளுக்கு உரிய விள​க்கம் அளிக்கப்பட்டதாக சாந்தகுமார் விவரித்தார்

வேலையை இழக்கும் நான்கு தோட்டங்களைச் சேர்ந்த த் தொழிலாளர்களுக்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க சட்ட விதிப்படி கிடைக்க வேண்டிய அனுகூலங்களான வேலை ஆட்குறைப்பு தொகை, சிறப்பு நிதி மற்றும் சேவையை வழங்கிய ஆண்டை கணக்கிட்டு அதற்கான நிதி ஆகியவற்றை பெற்றுத்தர மாநில தோட்டத் தொழிலாளர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சாந்தகுமார் தெரிவித்தார்.

மேலும் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு மற்ற தோட்டங்களில் வேலை பெற்றுத் தர தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதையும் சாந்தகுமார் விளக்கினார்.

Related News