தமது அரசியல் வைரிகளை ஒழிப்பதிலும் , வஞ்சிப்பதிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்சிப்படுத்துவதிலும், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய பிரதமர் அன்வார், தற்போது தனது அரசியல் வைரிகளை ஒழிப்பதில் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.
அன்வார் கடந்த 14 மாதங்களாக புத்ராஜெயாவை நிர்வகித்து வருகிறார்.ஆனால், மக்களின் ஏழ்மை நிலை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தோல்விக் கண்டுள்ளார். தவிர விற்பனை, சேவை வரியான SST - யை உயர்த்துவதிலும் விலை உயர்ந்த மற்றும் விலை குறைந்த பொருட்களுக்கு வரியை அறிமுகப்படுத்துவதிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.
மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, அரசாங்க உதவித் தொகையை மீட்டுக்கொண்டது, அரிசி விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது முதலிய பிரச்னைகள், மக்களுக்கு பெரும் தாக்கத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக முகைதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.








