பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மத்திய அரசும், பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநில அரசுகளும் தங்களின் வலுவான தலைமைத்துவத்தால் சிறந்த பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளதாக அதன் தலைவர் மன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய சிலாங்கூர் மந்திரி பெசாரான அமிருடின், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஆட்சி, ரிங்கிட்டின் மதிப்பை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தில் பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்கள் மட்டுமே 40 விழுக்காடு பங்களிப்பை வழங்குவதாகவும், கடந்த ஆண்டு சிலாங்கூரின் பொருளாதாரம் 460 பில்லியன் ரிங்கிட்டாக வளர்ந்து, ஜோகூர் மாநில பொருளாதாரத்தை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜோகூர் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளித்தால், ஆட்சி அமைத்த 3 முதல் 6 மாதங்களுக்குள் மாநில மேம்பாட்டுத் திட்டம் வெளியிடப்படும் என்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் உறுதியளித்தார். 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஜோகூர் மாநிலத் தேர்தல் வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








