ஜோகூர் மாநில சட்டமன்ற்த தேர்தலில் N07 புக்கிட் கெப்போங் சட்டமன்றத் தொகுதியில் PKR சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடும் சி. சுப்பிரமணி என்ற மணி, இத்தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தனது '5 முக்கிய உறுதிமொழிகளை' செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவினரின் முன்னிலையில் நடைபெற்ற இச்சந்திப்பில், வேட்பாளர் மணி, வெளியிட்ட ஐந்து முக்கிய திட்டங்கள் தொகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
புக்கிட் கெப்போங் இளைஞர்கள் வேலை தேடி சிங்கப்பூர் அல்லது ஜொகூர் பாருவிற்கு இடம்பெயர்வதைத் தடுக்க, உள்ளூரிலேயே TVET திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் என்றார்.
தொகுதியின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் சிறு வணிகர்கள் மற்றும் குடும்பத் தொழில்களுக்குத் தேவையான நிதி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கப்படும்.
தவிர புக்கிட் கெப்போங்கின் வரலாற்றுச் சிறப்பு, கலாச்சாரம் மற்றும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்தி மக்களின் வருவாயைப் பெருக்குதல். ஏழை எளிய குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்க, தரமான மலிவு விலை வீட்டுத் திட்டங்களைக் கொண்டு வருதல், குறுகலான சாலைகளை விரிவுபடுத்துதல், தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் 10 நிமிட மழைக்கே வெள்ளம் தேங்கும் மோசமான வடிகால் அமைப்புகளைச் சீரமைத்தல் முதலிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று மணி உறுதி அளித்தார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மணி, "இத்தொகுதி கடந்த 48 ஆண்டுகளாக நாட்டின் மிக உயரிய பதவிகளை வகித்த தலைவர்களை குறிப்பாக முன்னாள் மந்திரி பெசார்கள் வீற்றிருந்த தொகுதியாகும். அதேபோன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்வளவு பெரிய தலைவர்கள் இருந்தும் புக்கிட் கெப்போங் தொகுதி இன்னும் கிராமப்புறமாகவே காட்சியளிப்பதோடு, 30 ஆண்டுகால வெள்ளப் பிரச்சினைக்குக் கூட இன்னும் தீர்வு காணப்படவில்லை" என மிகுந்த வேதனையுடன் சாடினார்.
தாம் புக்கிட் கெப்போங் தொகுதியில் வெற்றி பெற்றால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவோடு இத்தொகுதியின் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தான் ஒரு பாலமாக இருந்து நிச்சயம் தீர்வுகாண முயல்வேன் என்றும், எனவே தொகுதி மக்கள் தனக்கு ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மணி கேட்டுக்கொண்டார்.








