தாய்லாந்து, நாராதிவாட் பகுதியில் உள்ள தக் பாய் என்னுமிடத்தில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தாய்லாந்திற்குள் நுழையும் மலேசியர்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தாய்லாந்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும், குற்றச் செயல்களைத் தடுக்க எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. மலேசியாவின் பொது நடவடிக்கை படையின் தென்கிழக்கு பிரிகேட் தளபதி அகமட் ராட்ஸியிடம், தாய்லாந்தின் அண்டை நாடுகள் ஒருங்கிணைப்பு மையத்தின் துணைத் தலைவர் ஜெனரல் சூரதேப் இந்த உறுதியை வழங்கினார்.
மேலும், இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைகளும் இணைந்து போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற எல்லை தாண்டிய குற்றங்களை ஒடுக்கத் தீவிரமாகச் செயல்பட இச்சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.








