தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகளைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து சிறை வார்டன்கள், தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தங்களின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி, சிறையிலிருந்த மூன்று கைதிகளைத் தாக்கியதாக இவர்கள் மீது குற்றவியல் சட்டப் பிரிவுகள் 323 மற்றும் 324-ன் கீழ் வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து வார்டன்களுக்கும் தலா 2,000 ரிங்கிட் முதல் 4,000 ரிங்கிட் வரையிலான பிணைத் தொகையுடன், கடுமையான நிபந்தனைகளின் கீழ் நீதிமன்றங்கள் தற்காலிக விடுதலை வழங்கியுள்ளன. இவ்வழக்குகள் வரும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்த சட்டத்துறைத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், கடந்த ஜூன் 29 அன்று இக்குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.
இதே விவகாரத்தில் கைதி ஒருவரின் மரணத்திற்கு காரணமானதாக, 25 வயதுடைய மற்றொரு சிறை வார்டன் ரிண்டீ ஓ'நெல் விக்டர் மீது ஏற்கனவே கடந்த டிசம்பரில் குற்றவியல் சட்டம் பிரிவு 304-ன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.









