கோலாலம்பூர், மே 28-
இஸ்ரேலிய பிரஜை ஒருவர் துப்பாக்கிகளை வாங்கியது தொடர்பில் வர்த்தகர் ஒருவர் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கு விசாரணையை மூடுவதற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலன் விசாரணை இலாகாவின் கணக்கியல் தடயவியல் புலனாய்வு பிரிவின் தலைமை உதவி இயக்குநர் 54 வயதுடைய ஏசிபி சின் கியாம் காங் மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனய்வுத்துறை இலாகாவின் கிரிப்டோ நாணய புலனாய்வுப் பிரிவின் தலைவர் உதவி கண்காணிப்பாளர் 42 வயதுடைய சுஹைரோன் அப்துல்லா ஆகிய இரணடு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கொண்டு வரபப்பட்டது.
நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த இரு போலீஸ் உயர் அதிகாரிகளும் 28 வயதுடைய கூ ஜிக்சியன் என்ற வர்ததகர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையை மூடி மறைப்பதற்காக தாங்கள் அரசுப்பணியாளர்கள் என்பதையும் பொருட்படுத்தாமல் அந்த வர்த்தகரிடமிருந்து 10 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தவிர, அந்த வர்த்தகரிடமிருந்து போலீஸ் அதிகாரி ஏசிபி சின் கியாம் காங் லஞ்சப்பணமாக மேலும் 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை பெற்றதாக அவருக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்விருவரும் கடந்த ஏப்ரல் 18,19 தேதிகளில் கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்-கில் உள்ள மெனாரா கேபிஜே- கட்டடத்தில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பெறப்பட்ட லஞ்சப்பணத்திற்கு நிகராக ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகளும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகளும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியிருப்பதால் இருவரையும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 40 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிபதி அஸுரா அல்வி உத்தரவிட்டார்.








