கடன் கேட்டு வந்த தமது நண்பருக்கு பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படும் 33 வயது நபர், பாராங்கினால் வெட்டப்பட்டதில் கடும் காயத்திற்கு ஆளாகினார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் போர்ட்டிக்சன், பெக்கான் புக்கிட் பெலன்டோக் என்ற இடத்தில் ஒரு கிளிக்கிற்கு அருகில் நிகழ்ந்தது.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இடது உள்ளங்கை, வலது முழங்கை,வலது முழுங்கால் ஆகிய பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்களுடன் ஆடவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முஹமாட் தெரிவித்தார்.
இந்த தாக்குதலை நடத்திய நபர், மதுபோதையில் இருந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
33 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழியை போலீசார் இன்று அதிகாலை 1.50 மணியளவில் போர்ட்டிக்சன், சுவா, தாமான் மூர்னியில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பாராங்கை ஒன்றையும் மீட்டதாக ஐடி ஷாம் குறிப்பிட்டார்.








