நெகிரி செம்பிலான், ஜூன் 18-
நெகிரி செம்பிலான், ஜெம்போல்-லிலுள்ள பள்ளிவாசலில், ஹாஜி பெருநாளன்று மாட்டை பலியிட விரும்பிய பள்ளி ஆசிரியையின் எண்ணம் நிறைவேறாமல் போனதால், அவர் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.
மாட்டை வாங்குவதற்காக, இம்மாதம் 12ஆம் தேதி, மாடுகளை விற்பவரான அனிஸ் என்பவரை, 39 வயதுடைய அந்த ஆசிரியை, வாட்ஸாப் செயலி வாயிலாக தொடர்புக் கொண்டு பேசியுள்ளார்.
மாட்டிற்கு ஈராயிரத்து 900 வெள்ளி விலையை நிர்ணயித்த அவ்வாடவர், அந்த ஆசிரியையிடம் அவரது பொருளக கணக்கின் எண்ணையும் வழங்கியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இணையம் வாயிலாக அந்த ஆசிரியை, முழுதொகையையும் செலுத்தியதை அடுத்து, அவர் கூறிய பள்ளிவாசலில் மாடு இறக்கப்படும் என அவ்வாடவர் உறுதியளித்திருந்தார்.
நேற்று பள்ளிவாசலுக்கு சென்ற போது, அங்கு மாடு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, அங்கிருந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட ஆடவரின் கைப்பேசி எண்ணைக் காட்டி விசாரித்தபோது, அது அனிஸ் என்பவரின் கைப்பேசி எண் இல்லை என்பது தெரிய வந்தது.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஆசிரியை, நேற்று மாலை மணி 6.12 அளவில் போலீசில் புகாரளித்ததை அடுத்து, அது குறித்து விசாரிக்கப்படுவதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டன்டன் ஹூ சாங் ஹூக் கூறினார்.








