மலேசிய இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், சிறு வணிகர்களுக்கான நிதியுதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ள சிறப்பு முயற்சிகள், புதிய அறிவிப்புகள் தொடர்பான விவரங்களை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவிலுள்ள மெனாரா பெர்கேசோவில் நடைபெற்ற இந்திய சமூக வழிபாட்டுத் தலங்களுக்கான மித்ரா மானியத்தை எடுத்து வழங்கிய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் டத்தோ ஸ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர், பினாங்கு துணை முதல்வர் ஜக்தீப் சிங் டியோ, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், தர்மா மடானி, ஹார்மோனி மடானி திட்டங்களின் கீழ், 164 வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 3.28 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 95 இந்து ஆலயங்களுக்கு 1.9 மில்லியன் ரிங்கிட்டும், 57 சீக்கிய குருத்வாராக்களுக்கும், 12 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் 1.38 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆலயத்திற்கும் தலா 20 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் விவரித்தார்.

தர்மா மடானி திட்டத்தின் கீழ் இதுவரை 771 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 15.42 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே தர்மா மடானி திட்டத்தின் கீழ் தங்கள் ஆலயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி உதவியின் மூலம் சமயம் சார்ந்த நடவடிக்கைகளை விரிவுப்படுத்திக் கொள்ள பெரும் பயனாக இருக்கும் என்பதுடன் இவ்வுதவியை வழங்கிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணனுக்கும், மித்ராவிற்கும் நன்றி கூற தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

தர்மா மடானி திட்டத்தின் கீழ் ஆலயங்களை வழிபாட்டுத் தலங்களாகப் பேணுவதோடு மட்டுமின்றி, கல்வி, ஆன்மீகம், கலாச்சாரம், இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக நலச் செயல்பாடுகளுக்கான மையங்களாக மாற்றுவதே ஒவ்வோர் ஆலயத்திற்கும் தலா 20 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமாகும்.








