பேராக், தெலுக் இந்தானில் உள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர், மாணவியின் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாணவியிடம் குறுஞ்செய்திகள் மூலம் அன்பு மற்றும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, மாணவியின் குடும்பத்தினர் தலைமை ஆசிரியரைத் தாக்கியதாக கூறப்படுவது தொடர்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று பேராக் போலீஸ் தலைவர் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒன்பது பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டம், 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக், இப்புகார் குறித்து விசாரணை நடத்த பேராக் மாநிலக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடியும் வரை 56 வயதுடைய தலைமை ஆசிரியர் பாகான் டத்தோ கல்வி அலுவலகத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதையும் அமைச்சர் விளக்கினார்.








