பெர்லிஸ் மாநில கடற்பரப்பில் இன்று அதிகாலை நடந்த எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது, மலேசிய கடல்சார் அமலாக்கப் படையான எம்எம்இஏவைச் (MMEA) சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், அவருடன் பணியில் இருந்த மூன்று அதிகாரிகள் காயமடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
கங்கார், சுங்கை பாடாங் கடற்பகுதியில் இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில், அக்குழு எல்லைக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.
மேலும், உயிரிழந்த அதிகாரிக்கு 14 மற்றும் 11 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் மனைவியும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் உடல், கங்காரில் உள்ள துவாங்கு ஃபௌஸியா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், இன்று அவரது சொந்த ஊரான கெடா மாநிலம், கோலா நெராங்கிற்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக மலேசிய கடல்சார் அமலாக்கப் படையானது இன்று முழுமையான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.








