பத்து பஹாட், மே 30-
படிவ மூன்று பயிலும் மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஓர் உணவக தொழிலாளர் ஒருவர் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
24 வயது லிம் மின் டெக் என்கிற அந்த உணவக தொழிலாளர் நீதிபதி இர்வான் சுவைன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு இரு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒரு பிரம்படி என்று தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14 (a) மற்றும் 14 (b) ஆகிய பிரிவுகளின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத நடுப்பகுதியில், பத்து பஹாட், தாமான் ஸ்ரீ சாகா -விற்கு அருகிலுள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக முதல் குற்றச்சாட்டிலும், அதே வருடத்தின் அக்டோபர் மாத கடைசியில் பத்து பஹாட்-டில் கைவிடப்பட்ட ஒரு தொழிற்சாலையில் அதே மாணவியை உடல் ரீதியாக வன்கொடுமை புரிந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த உணவக தொழிலாளியின் ஆசையை நிறைவேற்ற தவறினால் பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டை எரித்து விடுவதாக அச்சுறுத்தி இத்தகைய வக்கீர செயலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.








