துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட யாயாசான் அகால்புடி அறவாரியம் தொடர்பாக லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி, சட்டவிரோதப் பண மாற்றம் மீதான வழக்கில் விடுவிக்கப்பட்டது குறித்து சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ இட்ரஸ் ஹாருன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஏபி கோரிக்கை விடுத்துள்ளது.
அகமட் ஜாஹிட் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மேலும் ஆழமான புலன் விசாரணை தேவை என்று நீதிமன்றத்தில் பிராசிகியூஷன் தரப்பு தெரிவித்து இருப்பதை டிஏபி புரிந்து கொண்ட போதிலும், அகமட் ஜாஹிட் வழக்கிலிருந்து விடுவிக்கப்படாமல் 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது குறித்து பல்வேறு தரப்பினர் குறைக்கூறி விமர்சனம் செய்து வருவதை முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடைமுறையை டிஏபி மதிக்கிறது. ஆனால், நீதி, சமதர்மம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் இது குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய தார்மீக கடப்பாட்டில் சட்டத்துறை தலைவர் இட்ரஸ் ஹாருன் இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
தவிர நீதிமன்ற வழக்குகளில் அரசாங்கத் தலையீடுகள் இல்லாமல் இருப்பதை டிஏபி எல்லா காலகட்டத்திலும் உறுதி செய்யும் என்று அந்தோணி லோக் உத்தரவாதம் அளித்துள்ளார்.








