மாணவர்கள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோதப் பந்தயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோலாலம்பூரில் உள்ள 122 இடைநிலை பள்ளிகளில் போலீஸ் தங்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை இருமடங்காக அதிகரிக்கவுள்ளது.
'போக்குவரத்து விழிப்புணர்வு ஆதரவுத் திட்டம்' என்னும் இந்த புதிய நடவடிக்கையைக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சுஸ் இன்று செராஸ் ஆலாம் டமாய் தேசிய இடைநிலை பள்ளியில் தொடக்கி வைத்தார். குற்றத் தடுப்பை வலுப்படுத்தப் பிற போலீஸ் பிரிவுகளும் இதில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
சட்டவிரோதப் பந்தயங்கள் போன்ற போக்குவரத்துச் சார்ந்த குற்றங்களில் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், இளம் வயதிலேயே சாலைப் பாதுகாப்பு விதிகளை மதிக்கும் பண்பாட்டை வளர்ப்பதும் ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று டத்தோ பாடில் குறிப்பிட்டுள்ளார்.








