ஏழு நாடுகளைச் சேர்ந்த 94 சட்டவிரோதக் குடியேறிகள் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் 1 வழியாகத் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கெடா மாநிலக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் முகமட் ரிதுவான் பின் முகமட் ஜைன் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டவர்களில் 82 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவர். இவர்கள் முன்னதாகப் பெலாந்திக் குடிவரவு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பங்களாதேஷ், சீனா, எகிப்து, கென்யா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள், முறையான ஆவணங்களின்றி நுழைந்தது மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுத் தண்டனையை நிறைவு செய்தவர்களாவர்.
தொடர் அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இவர்கள் அனைவரும் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் குடிநுழைவுத் துறையின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிந்து நாடு கடத்தும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும் முகமட் ரிதுவான் குறிப்பிட்டுள்ளார்.
















