Sep 25, 2026
Thisaigal NewsYouTube
 பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: மலேசியா உதவத் தயார் – பிரதமர் அன்வர்
தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: மலேசியா உதவத் தயார் – பிரதமர் அன்வர்

Share:

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மலேசியா தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "மலேசியாவும் பிலிப்பைன்ஸும் நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் ஆசியான் கூட்டமைப்பின் உறுப்பினர்களாவர். இக்கட்டான இந்தச் சூழலில் மலேசியாவின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பிலிப்பைன்ஸ் மக்களுடன் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை மின்டனாவோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், மலேசியாவின் சபா மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தாவாவ், செம்பூர்ணா, குனாக் மற்றும் லஹாட் டத்து ஆகிய கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்கப்பட்டன.

மலேசிய அரசாங்கம் இந்தச் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், நாட்டின் அவசரக்கால மீட்புப் படையினர் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அன்வார் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Related News