கார் ஓட்டுநர் மற்றும் ஐந்து பயணிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பலியான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 49 வயது லாரி ஓட்டுநரைத் தடுப்புக் காவலில் வைக்க போலீசார் விடுத்த கோரிக்கையைச் சுங்கை பட்டாணி மெஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி அஸ்லான் பஸ்ரி குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். பினாங்கு, பெர்தாமில் இருந்து கெடா, மெர்போக் நோக்கிச் சென்று கொண்டிருந்த புரோட்டான் எக்ஸ்50 கார், கம்பாங் பாரு பினாங்கு துங்கல் பகுதியில் மண் ஏற்றி வந்த லாரியுடன் மோதியதில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிர் இழந்ததுடன் மூன்று வயது சிறுமி படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து கெடா மாநிலப் போலீஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா கூறுகையில், லாரி ஓட்டுநரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இருந்தது என்றும், விபத்தின் போது அவர் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பிற்குள் தான் லாரியை ஓட்டினார் என்றும் தெரிவித்தார்.
அவருக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் எவ்வித தடயமும் இல்லை என்றாலும், அவரிடம் தீர்க்கப்படாத 4 சம்மன்கள் உட்பட மொத்தம் 7 போக்குவரத்து சம்மன்கள் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








