நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுப் பேரிடரில் பாதிக்கப்பட்ட 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலாகக் கைகொடுத்துள்ளது மடானி அரசாங்கம்!
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10,000 ரிங்கிட் வீதம், மொத்தம் 540,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பெரும் ஒத்துழைப்புடன் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அரசாங்கத்தின் சார்பில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்.
கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள பெர்கேசோ தலைமையகத்தின் எட்டாவது மாடி மண்டபத்தில் இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுப் பேரிடரைத் தொடர்ந்து, 54 மலேசியக் குடிமக்களை இதுவரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன், தேவைகளைக் கவனிப்பதற்கான பொறுப்பை மனிதவள அமைச்சிடம் அமைச்சரவை ஒப்படைத்தது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து, மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா, பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டது.
கடந்த நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் 540,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே இன்று இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்தர் நாயர், மனிதவள அமைச்சின் செயல்பாட்டுப் பிரிவுக்கான துணைச் செயலாளர் சுடெக்னோ அகமட் பெலோன், பெர்கேசோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அசீஸ் முகமது, தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் அலியாஸ் உட்பட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.








