விநாயகர் பெருமானின் உற்சவத் திருநாளான விநாயர் சதுர்த்தி விழா, நாளை செப்டம்பர் 18 ஆம் தேதி திங்கட்கிழமை கோலாலம்பூர், கோர்ட்டு மலை, ஸ்ரீ கணேசர் கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு கோயிலில் விசேஷ வழிபாடு, அபிஷேகம், மகா தீபாரதனை, மாலை 7.00 மணிக்கு விநாயகர் சதுர்த்தி மகோற்சவ கொடியேற்று விழா வைபவம், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் ஸ்ரீ கணேசர் பெருமான், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க ரத விக்கிரக ஊர்வலம் மேளதாள, நாதஸ்வர இசை முழங்க பக்தர்கள் புடை சூழ கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்திலிருந்து புறப்பட்டார்.
டான்ஸ்ரீ நடராஜா மற்றும் தேவஸ்தானத்தின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பின்தொடர, விநாயகப் பெருமானின் வெள்ளி இரதம் ஜாலான் புது லாமா, பெர்சியாரன் மே வங்கி, ஜாலான் ராஜா சூலன், ஜாலான் துன் பேராக், ஜாலான் சுல்தான், ஜாலான் ஹாங் கஸ்தூரி, ஜாலான் துன் எச்.எஸ்.லீ, ஜாலான் துன் சம்பந்தன், ஜாலான் ஸ்கோட், ஜாலான் சுல்தான் அப்துல் சமத், ஜாலான் லிட்டில் இந்தியா உட்பட பல சாலைகளை கடந்த வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த வண்ணம், அவர்களின் அர்ச்சனையை ஏற்றி, பவனி வந்து கொண்டு இருக்கிறது.
நாளை திங்கட்கிழமை ஸ்ரீ கணேசர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி மாகோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது.
காலை முதல் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும் அதேவேளையில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, ஸ்ரீ கணேசர் பெருமானின் அருளை பெற்றுய்யுமாறு தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.








