பெத்தாலிங் ஜெயா,ஜன.23
ஷா ஆலம், செக்ஷன் 28 இல் கடந்த ஞாயிற்றக்கிழமை இரு ஆடவர்கள் சண்டையிட்டுக்கொண்டது தொடர்பில் அந்த இரு ஆடவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கார் நிறுத்தும் இடத்திற்கு அருகில் கைப்பந்து விளையாட்டுத் திடலில் உருளைக் கட்டைப் போன்ற மரச்சட்டத்தை ஆயுதமாக ஏந்திக்கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்ட அந்த இருவரையும் போலீசார் அடையாளம் கண்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமாட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
19 மற்றும் 25 வயதுடைய அந்த இரு நபர்களும் விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆடவர் ஒருவர் தனது மூத்த சகோதரியுடன் தொடர்பு வைத்து இருப்பதை கண்டித்து எச்சரிக்கை விடுக்க நபர் ஒருவர் சென்ற போது இந்த சண்டை மூண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முஹமாட் இக்பால் குறிப்பிட்டார்.








