முஸ்லிம் அல்லாத தலைவர்களைவிட மோசமான முஸ்லிம் ஆட்சியாளர்கள்கூட குறைவான அடக்குமுறையாளர்கள்தான் என பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்த கருத்துக்கு, பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு தலைவரின் மத அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை மதிப்பிடுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தலைவர்களின் குணநலன், நேர்மை, செயல்பாடுகள் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிட வேண்டும் என்றார்.
பிடிக்காதவர்களிடம்கூட நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊழல் செய்யும் தலைவர்களுக்கு மதத்தின் பெயரால் தார்மீகப் பாதுகாப்பு வழங்கக்கூடாது என்றும், நீதி, நற்பண்பு, அறிவு மற்றும் நேர்மையே இஸ்லாத்தின் உயரிய அடையாளங்கள் என்றும் சைஃபுடின் இஸ்மாயில் கூறினார்.
மேலும், தேர்தலில் வேட்பாளர்களையும் அரசியல் கட்சிகளையும் அவர்களின் செயல்பாட்டு வரலாறு, நேர்மை மற்றும் ஆற்றலின் அடிப்படையில் வாக்காளர்கள் மதிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








