முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களைவிட மோசமான முஸ்லிம் ஆட்சியாளர்கள்கூட குறைவான அடக்குமுறையாளர்கள்தான் எனக் கூறிய பாஸ் கட்சித் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் கருத்துக்கு தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் நீதி மற்றும் நேர்மையை அவர் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் மதிப்பிட முடியாது என்றும், ஹாடி அவாங் தமது பொதுவான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.
மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது வெளியிடப்பட்ட இக்கருத்து, பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே சந்தேகத்தையும் பிளவையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் 8ஆவது பிரிவு அனைத்து மக்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத வேறுபாடுகளைக் கொண்டு மக்களைப் பிரிக்காமல், அனைத்து மலேசியர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையைப் பாதுகாப்பதே தலைவர்களின் பொறுப்பு என்றும் யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.








