கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏ-வின் பாதுகாப்புத் தயார் நிலை மற்றும் அவசரகால நடவடிக்கைகளைச் சோதிக்கும் வகையில், தேசிய பாதுகாப்பு மன்றமான எம்கேஎன் நான்கு நாட்கள் பாதுகாப்பு ஒத்திகையை நடத்தியுள்ளது.
நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை விமான நிலையத்தின் முதல் முனையத்தில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்ந்த 1,166 பேர் பங்கேற்றனர்.
விமானக் கடத்தல், ட்ரோனிலால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், ரசாயன, உயிரியல், கதிரியக்க, அணுசக்தி மற்றும் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள், தகவல் தொடர்புத் தடைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என நான்கு முக்கிய சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
மலேசிய ஆயுதப் படைகள், போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அரசாங்க அமைப்புகளும் இதில் பங்கேற்றன.
அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பையும், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கம் என தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.








