சிலாங்கூர் மாநிலத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், 47 வெள்ளத் தடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 3 கோடியே 645 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.
நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், ஏற்கெனவே தொடங்கப்பட்ட 30 திட்டங்களும், புதிதாக மேற்கொள்ளப்படவுள்ள 17 திட்டங்களும் அடங்கும்.
தொடர்ச்சித் திட்டங்களில் 13 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஒன்பது திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு திட்டங்கள் ஒப்பந்தப்புள்ளிக்கு முந்தைய கட்டத்திலும், ஆறு திட்டங்கள் வடிவமைப்புக் கட்டத்திலும் உள்ளன என்றார்.
ஒதுக்கீட்டில் கிள்ளான் ஆற்றுப் படுகைக்கு 91 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டும், லங்காட் ஆற்றுப் படுகைக்கு 73 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், வடிகால் கட்டமைப்புத் திட்டங்களுக்கு 1 கோடியே 938 லட்சம் ரிங்கிட்டும், ஆற்றுப் படுகை மேம்பாடு மற்றும் நிர்வாகத் திட்டங்களுக்கு 1 கோடியே 790 லட்சம் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் திட்டத்தின் கீழ் வெள்ளத் தடுப்பு மற்றும் ஆற்றின் நீரோட்டத்தை மேம்படுத்துவதற்காக மேலும் 2 கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பணிகள் தற்போது 71.43 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும் அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
நீண்டகால வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் வெள்ள அபாயம் உள்ள 354 பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








