முஸ்லிம் அல்லாதவர்களைவிட மோசமான முஸ்லிம்கள்கூட குறைவான அடக்குமுறையாளர்கள்தான் என பாஸ் கட்சித் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்த கருத்து பெரும் ஏமாற்றமளிப்பதாக பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ சாங் லி காங் தெரிவித்துள்ளார்.
உயர்ந்த சமய அறிவைக் கொண்டுள்ள ஒருவர், சமூகத்தில் நல்லொழுக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் சாங் லி காங் குறிப்பிட்டார்.
ஆனால், ஒருவரின் நற்பண்புகளை அவர் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் தீர்மானிப்பது தவறான அணுகுமுறை என்றும், மக்களிடையே மத அடிப்படையிலான சந்தேகங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இன, மத நல்லிணக்கம் முக்கியமானது என்றும், மதப் பதற்றங்களைத் தூண்டும் அரசியல் கருத்துகள் நாட்டின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சாங் லி காங் தெரிவித்தார்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மக்களின் ஒற்றுமையையும் நாட்டின் நிலைத்தன்மையையும் பணயம் வைக்கும் அளவுக்கு பாஸ் கட்சி சென்றுவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மதத் தலைவர்களின் சிறப்பு அவர்களின் அறிவில் மட்டுமல்ல, அவர்களின் நற்பண்புகளிலும் வெளிப்பட வேண்டும் என்றும், மக்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கும் தலைவர்களே மலேசியாவுக்குத் தேவை என்றும் சாங் லி காங் வலியுறுத்தினார்.








