பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.01-
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப், மலேசியர் அல்லாத தொழிலாளர்களுக்கு, அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் கட்டாய இபிஎப். சந்தா திட்டத்தை இன்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கியது.
அந்நிய நாட்டுத் தொழிலார்களுக்கான இபிஎப். சந்தா, இந்த அக்டோபர் மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இந்தப் புதிய கொள்கையின் கீழ் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் மாதச் சம்பளத்தில் தலா 2 விழுக்காடு இபிஎப். சந்தா செலுத்த வேண்டும் என்று இபிஎப். வாரியம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
மலேசிய குடிநுழைவுத்துறையினால் வழங்கப்பட்ட செல்லத்தக்க வேலை பெர்மிட் மற்றும் கடப்பிதழைக் கொண்டுள்ள அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்கு இபிஎப். சந்தா, அவர்களின் சம்பளத்தில் கட்டாயம் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
தொழிலாளர் ஒருவருக்கு அவரின் சம்பளத்தில் 2 விழுக்காடு இபிஎப். சந்தா வெட்டப்படும் அதே வேளையில் அந்த தொழிலாளருக்கு தனது பங்காக முதலாளிமார்கள் தலா 2 விழுக்காடு சந்தா வழங்கப்பட வேண்டும்.
அந்நிய நாட்டவர்களைக் கொண்டுள்ள வீட்டுப் பணியாளர்களைத் தவிர மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்யும் அந்நிய நாட்டவர்கள் அனைருக்கும் இந்த இபிஎப். காப்பீடு பொருந்தும் என்று இபிஎப். தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.








