Mar 20, 2026
Thisaigal NewsYouTube
ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

Share:

உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு நோன்புப்பெருநாளை மலேசியர்கள் எளிமையாகவும், சிக்கனமாகவும் கொண்டாடுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகைக்கால பாரம்பரியம் முக்கியமானது என்றாலும், தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

"வழக்கமாக ஏழு வகை பலகாரங்கள் செய்தால், அதை நான்காகக் குறைத்துக் கொள்ளுங்கள். உணவைத் தயாரிப்பதில் சிக்கனத்தைக் கடைபிடிப்பது அவசியம்; நாம் சேமிக்கப் பழக வேண்டும்," என்று பினாங்கு, ரந்தாவ் மானிஸ்-வில் ரமலான் நிகழ்வில் கலந்து கொண்ட போது பிரதமர் இந்த உருக்கமாக வேண்டுகோளை விடுத்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள இத்தகைய ஒழுக்கம் அவசியம் என்றார்.

ரமலான் மாதம் கற்றுத்தந்த சுயக்கட்டுப்பாட்டை, பணத்தைச் செலவிடுவதிலும் மலேசியர்கள் காட்ட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

Related News