Jun 30, 2026
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

Share:

பெரும்பாலான மாநிலங்கள், கூட்டரசு அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தும் தொகையை விட அதிக அளவிலான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கத்திடமிருந்து பெற்று வருகின்றன என்று பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், சில மாநிலங்கள் கூட்டரசு நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.

கடந்த 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே, கூட்டரசு அரசாங்கத்திற்கு வழங்கிய வரி வருவாயை விட குறைவான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் சராசரியாக 43.6 பில்லியன் ரிங்கிட் வரி வருவாயை கூட்டரசு அரசாங்கத்திற்கு வழங்கிய சிலாங்கூர், 2023 முதல் 2025 வரை ஆண்டு தோறும் 15 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை மட்டுமே பெற்றதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், பினாங்கு மாநிலம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் கூட்டரசு அரசாங்கத்திற்கு 10.7 பில்லியன் ரிங்கிட் வரி வருவாயை வழங்கியிருந்தாலும், 7.9 பில்லியன் ரிங்கிட் மட்டுமே அரசாங்கத்திடமிருந்து நிதி ஒதுக்கீடாகப் பெற்றுள்ளதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன் மூலம், ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசு, புத்ராஜெயாவிடமிருந்து அதிக நிதி பெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டையும் அன்வார் மறுத்துள்ளார்.

அதேவேளையில், பெரிகாத்தான் நேஷனல் ஆட்சி செய்யும் கெடா, கிளந்தான், திராங்கானு மற்றும் பெர்லிஸ்ஆகிய மாநிலங்களுக்கு கூட்டரசு அரசாங்கம் அதிகளவில் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளதாகவும் அன்வார் விவரித்துள்ளார்.

குறிப்பாக, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த மாநிலங்களுக்கு கூடுதல் கூட்டரசு நிதி வழங்கப்பட்டதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News