Jul 18, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

Share:

சரவாக் மாநிலத்திற்கு கூட்டரசு அரசாங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறப்பு மானியத் தொகை உயர்த்தப்பட உள்ளதாக பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஒப்பந்தம் 1963-இன் அடிப்படை நோக்கத்திற்கு ஏற்ப, சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம், மறுஆய்வு செய்யப்பட்டு, உயர்த்தப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கருவூலத் தலைமைச் செயலாளர் ஜோஹான் மஹ்மூத் மெரிக்கான் மற்றும் சரவாக் மாநிலச் செயலாளர் அபு பக்கர் மர்சுகி ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தச் சிறப்பு மானிய உயர்வுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என நாடாளுமன்றத்தில் இன்று, ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் டோரிஸ் சோபியா ப்ரோடி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சபாவுக்கு வழங்கப்படும் சிறப்பு மானியம் 600 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சரவாக்கிற்க்கான சிறப்பு மானியத்தையும் உயர்த்த கூட்டரசு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? என்று டோரிஸ் சோபியா ப்ரோடி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அன்வார், கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தாம் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மானியங்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், போர்னியோ மாநிலங்களுக்கு நியாயமான அளவிலான நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததை நினைவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News